பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வரும் பிரதமர் பின்னர் கார் மூலம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் மைதானம், அரசு விருந்தினர் மாளிகை, பிரதமர் மோடி செல்லும் பாதை ,பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகிய இடங்களில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் தளம், பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். பாதுகாப்புக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.