இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை விட்டுவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது.
அதற்கு மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸை பின் தொடர்வதை நிறுத்தினர்.
அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு மேலும் ஒரு வருடம் கேப்டனாக மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” ரோகித் சர்மா 5 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்றவர். அவரை நீக்கியது பெரிய முடிவு. அந்த இடத்தில் நானாக இருந்திருந்தாலும் பாண்டியாவை போன்ற ஒருவரைத்தான் கொண்டு வருவேன்.
ஆனால் அதற்கு முன் ரோகித் சர்மாவுக்கு ஒரு வருடம் வாய்ப்பு கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமித்து மொத்த அணியும் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்பேன்.
வருங்காலத்தை பார்க்கும் மும்பை நிர்வாகத்தின் கண்ணோட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா இப்போதும் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பெரியதாகும்.
பாண்டியா நல்ல திறமையைக் கொண்டுள்ளார். ஆனால் குஜராத்தின் கேப்டனாக இருப்பதை விட மும்பையின் கேப்டனாக இருப்பது அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் பெரிய அணி” என்று கூறியுள்ளார்.