சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தியதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசைப் பாராட்டி, இந்த நாளுக்காக நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் என அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வரும் அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.
CAA குறித்து செய்தியாளரிடம் பேசிய அகமதாபாத்தைச் சேர்ந்த டிம்பிள் வரந்தானி,
“நான் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள். 1990-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எனது பெற்றோருடன் குடிபெயர்ந்தேன்.
அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானில் இந்து பெண்கள் படும் வலிகள் மற்றும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. வெறும் பெண்கள் மட்டுமல்ல, பள்ளிக்கு செல்லும் இந்து மாணவர்களும் இதையே எதிர்கொள்கிறார்கள்.
நான் குஜராத்தில் தான் தங்கியிருக்கிறேன், அது பிரதமர் மோடியின் மாநிலம். 1990-ல் பெற்றோருடன் குடிபெயர்ந்தேன், 2016ல் குடியுரிமை பெற்றேன்.
எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களும் இந்தியர்களே. காங்கிரஸ் பதவியில் குடியுரிமை பெற 26 ஆண்டுகள் ஆனது. 2004 முதல் 2014 வரை மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்.
2004 முதல் 2014 வரை, நான் மூன்று முறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், அனைத்து ஆவணங்களும் இருந்தபோதிலும், அவர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்கள், பின்னர் 26 ஆண்டுகளில் நான் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றாலும் எனது குடியுரிமையை மூன்று முறை நிராகரித்தார்கள்.
ஒரு வகையில், இந்தியாவுக்கு வந்த பிறகு நன்றாக நடத்தப்பட்டோம், 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் 2016ல் குடியுரிமை பெற்றேன். பிரதமர் நரேந்திர மோடி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்ததால், மாவட்ட அளவில் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.