தெலுங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், ஜம்மிகுண்டா தாசில்தாராகப் பணியாற்றி வருபவர் ரஜினி. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரஜினியின் அலுவலகம், ஹனுமகொண்டா கே.எல்.நகர் காலனியில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், 22 நிலம் தொடர்பான பத்திரங்கள், 7 ஏக்கர் விவசாய நிலம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.
மேலும் 2 கார்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கியில் ரூ.25 லட்சம் மற்றும் ஒன்றரை கிலோ தங்க நகைகள் சிக்கியது.
இதனையடுத்து, ஜம்மிகுண்டா தாசில்தார் ரஜினியை கைது செய்த போலீசார், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.