சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஐந்தாண்டுகளில் அடிக்கல் நாட்டிய அனைத்து திட்டங்களிலும் 91 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.
இது பாஜகவின் பணி கலாச்சாரம். கடந்த காங்கிரஸ் அரசுகள் போல் இல்லாமல், இந்த வளர்ச்சிப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றபோது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நிலுவையில் உள்ள பல முடிக்கப்படாத பணிகள் இடம்பெற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்ததைக் கேட்டு எதிர்க்கட்சிகள் எங்களைப் பார்த்து சிரித்தனர். ஆனால் அயோத்தியில் ராமர் கோயில் கதவுகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், 370வது சட்டப்பிரிவு நீக்கம், என சாத்தியமில்லாத அனைத்து பணிகளையும் பிரதமர் செய்து முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
80 கோடி குடிமக்களுக்கு இலவச உணவு, ஏழைகளுக்கு 12 கோடி கழிவறைகள் கட்டுதல், நான்கு கோடி குடிமக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு, 10 கோடி வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் 14 கோடி குடிமக்களுக்கு குழாய் நீர் இணைப்பு உள்ளிட்டவை மோடி அரசின் முக்கிய சாதனைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நாட்டை பாதுகாப்பாகவும் வளமாகவும் ஆக்கியுள்ளார். எங்கு சென்றாலும்,மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பதை தெளிவாகக் காண முடிவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.