மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை சந்தித்தனர். அப்போது இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்கள், புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.
அதில், உங்கள் தலையீடு சந்தேஷ்காலியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் நிவாரணத்தையும் கொண்டு வருவதோடு, இந்தியா முழுவதும் உள்ள விளிம்புநிலை சமூகங்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என நம்புவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.