புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவிலேயே அதிக நகரங்கள் உள்ள பகுதியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்புச் செய்து கொடுக்க வேண்டும்.
பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளை இணைத்து, பெரு நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான விளங்கிய திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமாத ஜொலித்த காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகிறது. இதற்காக, அதன் அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்துப் புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளன.
இதேபோல், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளுக்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 28 புதிய நகராட்சிகளும், தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர் மற்றும் சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.