திமிரி அருகே உள்ள காவனூரில் மாசி மக உற்சவ திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள காவனூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், மாசி மக உற்சவ திருவிழாவை முன்னிட்டு மஹா உற்சவ தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், அங்காள பரமேஸ்வரி கருவறை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பலவித வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாசி மக உற்சவ திருவிழாவை முன்னிட்டு மஹா உற்சவ தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருத்தேர் காவனூரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்தது. அப்போது பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி அம்மனை மனம் உருக தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.