இத்தாலியில் காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் காப்பீடு செய்யப்படாத கார் ஓட்டி பிடிபட்ட 103 வயது மூதாட்டிக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இத்தாலியில் நேற்று இரவு காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் காப்பீடு செய்யப்படாத காரில் 103 வயதான மூதாட்டி கார் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார்.
ஃபெராராவிற்கு அருகிலுள்ள சுமார் 13,000 மக்கள் வசிக்கும் நகரமான பொண்டெனோவின் மையத்தில் இரவு 1 மணியளவில் ஆபத்தான முறையில் கார் ஒன்று இயக்கப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே அந்த காரை பின்தொடர்ந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் காரை பிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ஓட்டுநர் உரிமத்தை வாங்கி பார்த்தனர்.
அதில் அவரின் பிறந்த தேதியை கண்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அந்த மூதாட்டிக்கு 103 என போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
கியூசெப்பினா மொலினாரி என்ற இந்த மூதாட்டி 1920 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அவர் நண்பர்களைச் சந்திப்பதற்காக போண்டெனோவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டில் திசை தெரியாமல் திசைதிருப்பப்பட்டு வழி தவறிவிட்டார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இவரின் ஓட்டுநர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காலாதியாகிவிட்டது. இத்தாலியில் , 80 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தைப் புதுப்பிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
ஆனால் இவரோ இரண்டு ஆண்டுகளாக ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. ஆகையால் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.