பிரதமர் மோடி வரும் 19 -ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பாஜக மாநில துணைத்தலைவர் கேபி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற பூமி பூஜை போடும் விழாவில், மாவட்ட தலைவர்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பேசிய அவர், பிரதமர் மோடி தமிழகத்திற்கு தொடர் வருகையால் தமிழக பாஜகவிற்கு ஆதரவு கூடி வருகிறது.
பிரதமர் மோடி வருகை குறித்து அரசியல் புரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ உளறுகிறார். தேர்தலுக்காகவே தமிழ்நாட்டில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இந்த விவகாரத்தில், ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ஸ்டாலின் சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் பாஜக தலையிட்டிருந்தால், எடப்பாடி பழனிசாமி, இப்போது பாஜகவுடன் வந்திருப்பார். ஆனால், பாஜக மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்கிறது.
நாடு முழுவதும் உள்ள மக்கள் மோடியை ஆதரிக்கின்றனர். எனவே, இந்த முறை, அதாவது மூன்றாவது முறையும் மோடி பிரதமர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.