ஸ்டாப் வாட்ச் என்ற விதிமுறை நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் அமலுக்கு வரவுள்ளது.
அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றே சொல்லலாம். இந்த கிரிக்கெட் பொறுத்தவரையில் ஒன்றல்ல இரண்டல்ல பல விதிமுறைகள் உள்ளது.
கிரிக்கெட் போட்டி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடத்தப்படுவதற்கு ஐசிசி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. டி20 போட்டி என்றால் மூன்று முதல் 3:30 மணி நேரத்திற்குள்ளும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஆறரை முதல் 7 மணி நேரத்தில் முடிக்கவும் ஐசிசி திட்டமிட்டு வருகிறது.
அதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐசிசி ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்தது. இதற்கு ஸ்டாப் க்ளாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது பந்து வீசும் அணி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிக்குள் தொடங்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு முறை 60 வினாடிக்குள் அடுத்த ஓவரை தொடங்க முடியவில்லை என்றால் இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும்.
அதையும் மீறி மூன்றாவது முறையாக பந்து வீசும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.
இந்த விதிமுறை சோதனை செய்யப்பட்ட பிறகே அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. அதற்காக கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்தும், மேற்கிந்திய அணியும் விளையாடிய டி20 போட்டியில் இந்த விதி முதல்முறையாக சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது விதி நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் அமலுக்கு வர உள்ளது. அதன்பின் நடைபெற உள்ள அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த விதி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.