மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 21-வது போட்டியான அரையிறுதி போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்தது.
இதில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி மோலினக்ஸ் தலா 10 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய திஷா டக் அவுட் ஆனார்.
அதேபோல் மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 66 ரன்களை எடுத்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
மும்பை அணியை பொறுத்த வரை சைகா இஷாக், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், மத்தியூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா 19 ரன்களிலும், மத்தியூஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி நீதமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது.
மும்பை அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது களத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமேலியா கேர் இருந்தனர்.
கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்ததோடு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.