இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 21-வது போட்டியான அரையிறுதி போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முக்கிய பங்கு வகித்த வீராங்கனையாக திகழ்கிறார் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.
ஏனெனில் அரையிறுதி போட்டியில் பெங்களூரு அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறிய நிலையில் ஒரே ஆளாக நின்று 66 ரன்களை எடுத்து அணியை காப்பாற்றினார் எல்லிஸ் பெர்ரி.
முன்னதாக இந்த தொடரில் பெங்களூரு – உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியின்போது எல்லிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த டாடா காரின் கண்ணாடியை தாக்கியது. அதில் கண்ணாடி உடைந்து சிதறியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவில் காரின் உடைந்த கண்ணாடியை பிரேம் செய்த டாடா நிறுவனம் அதனை எல்லிஸ் பெர்ரிக்கு நினைவு பரிசாக வழங்கி உள்ளது. அத்துடன் அதில் “பெர்ரி பவர்புல்பஞ்ச் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 17 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.