சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்குபெறுகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22ம் தேதி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி காலை 9:30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.