பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி பெருவிழா, இன்று (16-ஆம் தேதி) தொடங்கியது. வரும் 25-ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஒரு வாரக் காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு.ரங்கா ரோடு, சி.பி ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யூ, ஆர்.கே மடம் சாலை வழியாக சென்று கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ் சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர்சாலை, பி.எஸ் சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வரும், 18-ஆம் தேதி, அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 05.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், வரும் 22-ஆம் தேதி தேர்திருவிழா அன்று காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 23-ஆம் தேதி அன்று அறுபத்துமூவர் திருவிழா அன்று மதியம் 01.00 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.