சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தேர்தல் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் வணிகர்களை பார்க்கின்றனர்.
இதன் காரணமாக வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் பொருள், பண இழப்பு, மன உளைச்சல், வாழ்வாதார இழப்புக்கு வணிகர்கள் ஆளாகின்றனர்.
மேலும், காய்கறி மற்றும் பழம் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, ரொக்க கொள்முதலுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் வரை வணிகர்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
வணிகர்கள் உரிய விற்பனை பட்டியலுடன் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதையும், தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி, காலதாமதம் செய்வதையும் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
எனவே, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, வணிகர்களுக்கு தேவையில்லாத இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.