தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டெல்லியில் வெளியானது. தமிழகத்தில் ஏப்ரல் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி அருகே தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.95 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் முக்கிய சாலைகளிலும், முக்கிய இடங்களிலும் விடியவிடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.