2024 -ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும். தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால், தலைநகர் சென்னை மற்றும் கரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் விளம்பர போர்டுகள், சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
சென்னையில் பாரீஸ் கார்னர், அண்ணாசாலை, மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன.
இதேபோல, கரூர் நகரில் அரசியல் கட்சி விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பேருந்து நிலையம். சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் பகுதிகளில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றும் பணி அதிரடியாக நடைபெற்று வருகிறது.
















