இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இரண்டு சீசனிலும் இறுதிப்போட்டி வரை வந்து அசத்திய குஜராத் அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் தகுதி பெற வேண்டும் என்ற முயற்சியில் களம் இறங்குகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு சீசன்களில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்த நிலையில் தற்போது அவர் மும்பை அணிக்கு சென்று விட்டார். இதன் காரணமாக கில், குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட அணியாக இருந்தாலும், அதில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை.
ஆனால் குஜராத் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். இதில் சாய் சுதர்சன் ஏற்கனவே தன்னுடைய திறமையை கடந்த சீசனில் நிரூபித்திருக்கிறார். இதனால் இம்முறை அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதேபோன்று விஜய் சங்கர் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக அணியில் விளங்குவார். மேலும் சுழற் பந்துவீச்சில் சாய் கிஷோர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று வீரர்களை தாண்டி நான்காவதாக ஒரு அதிரடி கிரிக்கெட் வீரர் இருக்கிறார். அவர் தான் ஷாருக்கான் பஞ்சாப் அணியில் இருந்த அவர் தற்போது குஜராத் அணிக்கு மாறியிருக்கிறார்.
அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கக்கூடிய ஷாருக்கான் வைத்து குஜராத் அணி பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது.
இது குறித்து அணியின் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். ஷாருக்கான் ஒரு அதிரடி வீரர் என்பதால் அவரை இறுதிக்கட்டத்தில் பயன்படுத்த போகிறீர்களா என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த ஆஷிஷ் நெஹ்ரா ஷாருக்கான் என்ற நடிகரின் பெயரை அவர் வைத்திருக்கிறார். எப்படி ஷாருக்கான் பாலிவுட்டில் முக்கியமான ஒரு நடிகராக இருக்கிறாரோ அதேபோல் எங்கள் அணியில் இருக்கும் ஷாருக்கான் ஒரு முக்கியமான நபராக அணியில் இருப்பார்.
அவரை நாங்கள் ஒரு முக்கிய கதாநாயகனாக பார்க்கிறோம் என்று நெஹ்ரா கூறி இருக்கிறார். நெஹ்ராவின் இந்த கருத்து தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் ஷாருக்கான் தற்போது சுழற் பந்துவீச்சையும் கற்றுக் கொண்டிருக்கிறார். போதிய வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் ஷாருக்கானுக்கு குஜராத் அணி ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.