எதிர்க்கட்சிகளின் எத்தகைய சதியையும் எதிர்த்துப் போராடி, வெற்றி பெறுவேன் என்று தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஜக்தியாலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சக்தியை அழிக்க வேண்டும் என்று யாராலும் எப்படி பேச முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘சக்தி’ கருத்துக்கு மோடி பதிலடி கொடுத்தார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர்மோடி,
“ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் ஒரு வடிவம், நான் உன்னை சக்தியின் வடிவமாக வணங்குகிறேன்” என்று கூறினார்.
“இந்த பூமியில் உள்ள ஒருவரால் எப்படி சக்தியை அழிக்க முடியும் என்று பேச முடியும்….எல்லோரும் சக்தியை வணங்குகிறார்கள். சந்திரயானின் வெற்றியை சிவசக்திக்கு அர்ப்பணித்தோம்.” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் எத்தகைய சதியையும் எதிர்த்துப் போராடுவேன் என்றும் ‘தன்னை ‘பாரத மாதாவின் உண்மையான பக்தன்’ என்று வர்ணித்த பிரதமர் மோடி, “சக்தியின் ஒவ்வொரு வடிவத்தின் பாதுகாப்பிற்காக என் உயிரைக் கொடுப்பேன்” என்றார்.