மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்டுமானப் பணியின் போது, 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 13 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கட்டட இடிபாடுகளை அகற்றி விட்டு தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை, 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மேலும், சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.