சேலத்தில் பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரள, உள்ளிட்ட தென் மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கி உள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்த மாநிலங்களிலும் கடந்த மாதம் முதல், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் கடந்த 15-ந்தேதி பிரசாரம் மேற்கொண்ட மோடி, இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் அஞ்சு விளக்கு பகுதியில் இருந்து சுல்தான்பேட்டை வழியாக பாலக்காடு தலைமை தபால் நிலையம் வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் நின்றபடி வாகன பேரணி சென்றார்.
கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி சேலம் வந்தடைந்தார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றி வருகிறார். முன்னதாக விழா மேடை வரை திறந்த வாகனம் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டு இருந்த பாஜகவினர் மோடியை பார்த்ததும் உற்சாகம் அடைந்து மோடி..மோடி என கோஷம் எழுப்பினர்.
பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக நிர்வாகிகள் மற்றும், ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.