அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் தரன்ஜித் சிங் சந்து பாஜகவில் இணைந்தார்.
அமிர்தசரஸை சேர்ந்தவர் தரன்ஜித் சிங் சந்து. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்குப் பதிலாக சந்து அமெரிக்காவுக்கான தூதராகப் பொறுப்பேற்றார். கடந்த ஜனவரி மாதம், தரன்ஜித் சிங் சந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சந்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். வரும் மக்களவை தேர்தலில் அவர் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
வளர்ச்சி மிகவும் அவசியம். இந்த வளர்ச்சி அமிர்தசரஸையும் அடைய வேண்டும். எனவே, நான் நுழையும் புதிய பாதைக்கு என்னை ஊக்குவித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி. நான் போட்டியிடுவதன் மூலம், அமிர்தசரஸின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று கட்சி நினைத்தால், நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என அவர் தெரிவித்தார்.
1988-ம் ஆண்டு இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியான சந்து, இலங்கையில் இந்திய துணை தூதராக பணியிற்றினார். முன்னாள் சோவியத் யூனியனில் பணிபுரிந்த அவர், சோவியத் ஒன்றியம் பிளவுபட்ட போது உக்ரைனில் ஒரு புதிய தூதரகத்தைத் திறக்க அனுப்பப்பட்டார்.
ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்திலும் சந்து நியமிக்கப்பட்டார். அவர் செப்டம்பர் 2011 முதல் ஜூலை 2013 வரை பிராங்பேர்ட்டில் இந்தியத் தூதராகவும் பணியாற்றினார் மற்றும் மார்ச் 2009 முதல் ஆகஸ்ட் 2011 வரை வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக (ஐக்கிய நாடுகள்) பணியாற்றினார்.
பின்னர் மனித வளத் துறையின் இணைச் செயலாளராக (நிர்வாகம்) பணியாற்றினார். சந்து ஜூலை 2013 முதல் ஜனவரி 2017 வரை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.