85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க படிவம்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!
85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்கள் தபால் வாக்களிப்பதற்கான படிவம் வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே, மொத்த வாக்குச்சாவடிகள் 68 ஆயிரத்து 320-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை, 1 லட்சத்து 91 ஆயிரத்து 491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 52 ஆயிரத்து 938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வீடு வீடாக சென்று படிவம் 12-டி வழங்கப்படும். அதில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.