மதுரை மீனாட்சியம்மன், சித்திரை திருவிழா – முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது ஏப்ரல் 21-ம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் 15 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவான, மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட வைபவ நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா குறித்தான அதிகாரபூர்வ தேதிகள் வெளியாகியுள்ளன.
அதன்படி ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 19-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20-ம் திக்விஜயமும், ஏப்ரல் – 21-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
இதேபோன்று அழகர் கோயிலை பொறுத்தமட்டில் ஏப்ரல் 22-ம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்ரல் 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுகிறது.
இதையொட்டி சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருகிறது. அதன் தொடக்கமாக சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து யானை, காளைகள் முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்களால் சிறப்பு பூஜைக்குப் பின் முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.