கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக் கசிவு காரணமாக, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் திடீரென ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவருடைய உடல் நிலை சீராகி வருகிறது.
சத்குருவின் உடல்நிலை குணமடைந்து வருவதாக, அறுவை சிகிச்சைக்கு தலைமை தாங்கிய அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். வினித் சூரி கூறினார்.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த நான்கு வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், மார்ச் 8-ஆம் தேதி மகாசிவராத்திரி விழாவை நடத்துவது உட்பட தனது வழக்கமான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வந்தார். இந்தநிலையில், கடந்த மார்ச் 17-ஆம் தேதி அவருக்கு உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு CT ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில், மூளை வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தற்போது நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.