தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
தமிழகத்திற்கான முதல்கட்ட 9 வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா மற்றும் பாஜகவின் மூத்தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறறேன்.
விரைவில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா வெளியிடுவார். மக்களவைத் தேர்தலில் பாஜக 19 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மொத்தமாக 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் எனத் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் தொகுதி முக்கியமான தொகுதி. இங்கு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கிறது. இங்கு போட்டியிடுவது மிகவும் சவாலானது. பாஜக நிர்வாகிகள் கடந்த பத்து ஆண்டுகளாக கடின மாக உழைக்கிறார்கள். இவர்களின் உழைப்பை மக்கள் பார்த்து இருக்கிறார்கள். மேலும் மக்களுக்கான நலத் திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
கண்டிப்பாக கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன். இந்த தேர்தல் கடினமாக இருக்கும். திமுகவை பற்றி எனக்கு தெரியும், திமுக என் மீது எதை வேண்டுமானாலும் எடுத்து எறிவார்கள், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். கடந்த 33 மாத திமுகவின் அவல ஆட்சியை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளேன். திமுக என் மீது உள்ள பகை தீர்த்து கொள்ள முயற்சி செய்வார்கள், அதனை முறியடிக்க நானும் பாஜக தொண்டர்களும் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.