வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறுவோரிடையே விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி உரையாற்றினார்
வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரிக்கு விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி இன்று பயணம் மேற்கொண்டார். 79-வது தொகுப்பில் பயிற்சி பெறும் இந்திய ஆயுதப்படைகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் மற்றும் கல்லூரியின் நிரந்தர ஊழியர்களிடையே வி.ஆர். செளத்ரி உரையாற்றினார்.
இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் விமானப்படையின் திறன் குறித்து பயிற்சி அதிகாரிகளிடையே அவர் எடுத்துரைத்தார். இந்திய விமானப்படை தற்காலத்திற்கும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார்.
உலகில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதிலும், பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் போதும் இந்திய விமானப்படை ஆற்றி வரும் முக்கிய பங்கையும் விமானப்படை தளபதி விளக்கினார்.
ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் போன்றவற்றின் போது இந்திய விமானப் படையின் சிறப்பான செயல்பாடுகளை விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி எடுத்துரைத்தார்.