கேனரி தீவு கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.
சுற்றுலாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் அதிகம் செல்லும் இடம் என்றால் அது கடற்கரையும், மலைப் பிரதேசமும் என்றே சொல்லலாம்.
அப்படிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் அங்குச் சென்று வந்ததற்கு அடையாளமாக அங்கிருந்து ஏதேனும் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி இல்லை என்றாலும் அங்கே இயற்கையாக இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருக்கும் மணல், சிறிய சிறிய கற்கள், சங்குகள் என தங்களுக்குக் கிடைப்பதை எடுத்துச் செல்வார்கள்.
அவற்றை தாங்கள் சேகரிக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வது அல்லது சிறிது நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்த்து ரசித்து நினைவுகளைத் திரும்பப் பெறுவதும் வழக்கம்.
இந்நிலையில் தற்போது ஒரு தீவு, கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் என்று அறிவித்துள்ளது.
ஆம், கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையிலிருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் கடற்கரைகளிலிருந்து ஒரு டன் மணல் பொருட்களை இழக்கிறது என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேபோல் புகழ்பெற்ற “பாப்கார்ன் பீச்” ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அதிகாரிகள், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கேனரி நிர்வாக கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடற்கரை பகுதிகளிலிருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,70,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் பொருட்களால், கடற்கரையோரங்களின் இயற்கை சமநிலையைச் சீர்குலைத்து ஆபத்தில் உள்ளதால், அதிகாரிகள் சவாலை எதிர்கொள்கின்றனர்.