நீலப் பொருளாதாரம் குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டுப் பயிலரங்கை புவி அறிவியல் அமைச்சகம் நடத்தியது.
புதுதில்லியில் நீலப் பொருளாதாரம் குறித்த பயிலரங்குக்கு புவி அறிவியல் அமைச்சகம் இன்று (22-03-2024) ஏற்பாடு செய்திருந்தது. உலக வங்கி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம், நித்தி ஆயோக், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில மற்றும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பயிலரங்க அமர்வின்போது, நீலப் பொருளாதாரம் தொடர்பான அறிக்கை தயாரிப்பதில் அமைச்சகங்களின் கூட்டுப் பங்கேற்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் திறன் வாய்ந்த நீலப் பொருளாதார வளர்ச்சிக்கான பாதைகள் என்ற தலைப்பில் ஒரு முக்கிய அறிக்கையைத் தயாரிப்பதற்கு அறிவுசார் கூட்டு நிறுவனமாக உலக வங்கியுடன் இணைந்து புவி அறிவியல் அமைச்சகம் செயல்படுகிறது.
நீலப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதுமையான நிதி வழிமுறைகள் ஆகியவற்றில், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் தொடர்பான பகுதிகளை இந்த அறிக்கை கொண்டிருக்கும்.
இந்தியா ஒரு தனித்துவமான கடல்சார் நிலையைக் கொண்டுள்ளது. 7,517 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியை இந்தியா கொண்டுள்ளது. இத்தகைய பரந்த கடல்சார் தன்மைகளுடன், இந்தியாவின் நீலப் பொருளாதாரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.