பிரதமர் நரேந்திர மோடி, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியெல் வாங்சுக்கை திம்புவில் இன்று சந்தித்தார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியெல் வாங்சுக்கை திம்புவில் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பாரோவிலிருந்து திம்பு வரையிலான பயணத்தின் வழியெங்கும் மக்கள் அவருக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக மாட்சிமை தங்கிய மன்னருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியா-பூடான் இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான நட்புறவு குறித்து பிரதமர் மோடி, பூடான் மன்னரும் திருப்தி தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருதலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உறவுகளை வலுப்படுத்த துருக் கியால்போஸ் இயக்கம் அளித்த வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பின் முழு வரம்பையும் மறுஆய்வு செய்ய இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தியா – பூடான் இடையே கூட்டாண்மையை மேம்படுத்தி, மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு, இளைஞர், கல்வி, தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள் குறித்து அவர்கள் ஆராய்ந்தனர்.
கெலெபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி திட்டம் உட்பட இணைப்பு மற்றும் முதலீட்டு முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியாவும் பூடானும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் பண்புகளான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான உறவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.