திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில், துரியோதனன் படுகளமும், தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 1-ஆம் தேதி மகாபாரத அக்னி வசந்த பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக – அலங்காரங்களும் நடைபெற்றது. இதனையடுத்து தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவும், இதிகாச நாடகங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் சிறப்பாக நடைபெற்றது. களிமண்ணால் துரியோதனன் உருவபொம்மை வடிவமைக்கப்பட்டு, பூசாரிகளின் சிறப்பு வழிபாடுகளுடன் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மாலையில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.