சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அந்த வகையில் 2023 டிசம்பர் மாதம் மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கப்பலை தங்களுடைய கடத்தல் முயற்சிக்குப் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 15-ஆம் தேதி இந்தியக் கடற்கரையிலிருந்து, 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் சென்று கொண்டிருப்பதை இந்தியக் கடற்படை கண்டுபிடித்தது.
இதனைத் தொடர்ந்து, கப்பலை மீட்க இந்தியக் கடற்படை அதிரடியாகக் களத்தில் இறங்கியது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் நடவடிக்கையில், கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
பின்னர், சரக்கு கப்பலைச் சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, திடீரென இந்திய ஹெலிகாப்டர் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
சரணடையாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கப்பல் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழியின்றி கடற்கொள்ளையர்கள், இந்தியக் கடற்படையிடம் சரணடைந்தனர்.
பின்னர், கப்பலிலிருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். கப்பல் ஊழியர்கள் 17 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 100 நாட்களுக்கும் மேலாகக் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 35 சோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை காவல்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.