தேர்தலில் வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்க மாட்டேன் எனத் தமிழகப் பாஜக தலைவரும், பாஜக கோவை வேட்பாளருமான அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை தொகுதியில் 3 வேட்பாளர்களுக்கும், 3 கட்சியினருக்கும் இடையே நடக்கும் போட்டியில்லை. மாறாக, 70 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடக்கும் அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டியாகும்.
அமைச்சர்கள் அனைவரும் இங்கே முகாமிடலாம். நுாற்றுக் கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யலாம். ஆனால், நான் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்கமாட்டேன். பொதுமக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தல் விதிமுறையை முறையாகக் கடைபிடிப்பேன். எந்த சூழ்நிலையிலும் தேர்தல் விதிமுறைகளை மீற மாட்டேன்.
கோவையில் முதல்வர் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திரம் படைக்கும் வகையில், அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அரசியல் மாற்றமும், வளர்ச்சியும் கோவையிலிருந்து துவங்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமராகும்போது, சர்வதேச வரைபடத்தில் இடம் பெறவேண்டும். அதேபோல, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வென்று, சரித்திர சாதனை படைப்போம்.
எனக்கு டெல்லி அரசியல் செல்ல விருப்பம் இல்லை. மாறாகத் தமிழக அரசியலில் தொடர்ந்து நீடிக்கவே விரும்புகிறேன். கோவையில் என்னை போட்டியிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ஏற்று, மதித்து இங்கே உங்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளேன். நாடு முழுவதும் 400 எம்.பிக்களைப் பெற்று மோடி ஆட்சி அமைப்பார். அதேபோல, தமிழகத்தில் 2026 -ல் பாஜக ஆட்சி அமையும் என்றார்.