கோடைக் காலத்தில், மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கி உள்ளது.
அதன்படி, மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட விஷயங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து மருத்துவமனைகளிலும், விரிவான தீ பாதுகாப்பு தணிக்கை மற்றும் கள ஆய்வுகளை நடத்த வேண்டும். தீயணைக்கும் அமைப்புகள், தீ எச்சரிக்கை அலாரம், தீ புகை கண்டுபிடிப்பான்கள், தீயணைப்பு கருவிகள் மற்றும் தீயணைப்பு லிஃப்ட்கள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் முழுமையான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தீ தடையில்லா சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார சேவைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க பின்வரும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீயணைப்பு கருவிகள், ஹைட்ரான்ட்கள் மற்றும் அலாரங்கள் போன்ற தீயணைப்பு உபகரணங்களை மருத்துவமனைகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுக்கும் பராமரிப்பு அட்டவணையை அமைக்கவும், தீயை அணைக்கும் கருவிகளின் மாதாந்திர சோதனைகள், தீ அலாரங்கள் மற்றும் ஹைட்ரான்ட்டுகளின் காலாண்டு சோதனைகள் மற்றும் தொடர்புடைய இந்திய தரநிலைகளின்படி அவற்றின் செயல்திறனைச் சான்றளிப்பதற்கான வருடாந்திர தொழில்முறை ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக தொடர் ஆய்வுகளை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.