விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக ஸ்ரீ ராம் ரத யாத்திரை அமெரிக்கா மற்றும் கனடாவில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் ஆலய பிரதிஷ்டை விழாவின் அட்சதை மற்றும் பிரசாதங்களைப் பக்தர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து செயல்படும் விசுவ ஹிந்து பரிஷத், கனடாவில் உள்ள தங்கள் அமைப்புடன் சேர்ந்து ஸ்ரீராம் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கோயில்களுக்கு இடையே இணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஸ்ரீ ராம் ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா – கனடா இணைந்து நடத்தும் இந்த விழாவில் அமெரிக்காவுக்கு ஒரு ரதமும், கனடாவுக்கு இரண்டு ரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட இந்த ரதத்தில் (தேர்) ஸ்ரீராமர், சீதாதேவி, லெட்சுமணன் மற்றும் ஹனுமன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்களுக்கு அட்சதை உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படும்.
ஏறக்குறைய 60 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை மிக விரிவான அளவில் நடத்தப்பட்டவுள்ளது. சுமார் 16,000 மைல்கள் தொலைவு கொண்ட இந்த ரத யாத்திரை அமெரிக்காவில் 850 கோயில்களிலும் கனடாவில் 150 கோயில்களிலும் நின்று செல்லும். இந்தத் தகவலை இரு நாடுகளைச் சேர்ந்த விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு கூட்டாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை ஒன்றுபடுத்துவது, பாரம்பரியமான இந்து சம்பிரதாயங்களைப் பரப்புவது இந்த யாத்திரையின் நோக்கமாகும்.
மேலும் இந்த ரத யாத்திரையின் போது உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ல் நடைபெற்ற ஸ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை விழாவின் அட்சதை மற்றும் பிரசாதங்களைப் பக்தர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுகர் குரோவ் என்னுமிடத்தில் அமைந்துள்ள விசுவ ஹிந்து பரிஷத் அமெரிக்காவின் தலைமையகத்திலிருந்து ஒரு ரதம் கடந்த 23 அன்று வழக்கமான சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் புறப்பட்டுள்ளது.
முதல் நாள் 500 மைல் தொலைவில் உள்ள கோயில்களுக்கு ரத யாத்திரை சென்றது. இல்லினாய்ஸில் உள்ள பாலாஜி மந்திர், ஜெகந்நாத் மந்திர், சிவ துர்கா ஹிந்து மந்திர், சுவாமி நாராயண் குருகுலம் உள்ளிட்ட இடங்களுக்கு ரதம் யாத்திரையாகச் சென்றது.
ஒவ்வொரு கோயில் முன்பும் ரத யாத்திரை நிறுத்தப்பட்ட போது அதற்குப் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிர்வாகிகள், பூஜாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசித்து ஆசிபெற்றனர்.
வட அமெரிக்க மக்களிடையே இந்த ரத யாத்திரை ஆன்மிக அலையை எழுப்பியுள்ளது. ஸ்ரீராமரே நேரில் வந்து ஆசி வழங்கியதாகப் பக்தர்கள் உணர்ந்தனர் என்று அமெரிக்காவில் உள்ள வி.ஹெச்.பி. அமைப்பின் பொதுச் செயலர் அமிதாப் மிட்டல் தெரிவித்தார்.
கனடாவில் ஸ்ரீ ராமர் ரத யாத்திரை இன்று தொடங்கியது. கனடாவில் உள்ள முக்கிய இந்துக் கோயில்கள் முன்னர் இந்த ரதம் நின்று செல்லும். மேலும் இதை அங்கீகரிக்கும் வகையில் அந்தக் கோயில்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை வழிகாட்டுதல் பேரில் சிறப்பு சான்றிதழும், ஸ்ரீ பாலராமர் படமும் வழங்கப்படும். கனடாவில் ரதம் 13,000 கி.மீ. தொலைவு பயணித்து 150-க்கும் மேலான கோயில்களில் நின்று செல்லுகிறது. இதன் மூலம் உலகமுழுவதும் இந்து கோயில்களுக்கு இடையே இணைப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.