பொது மக்களுடன் தனது இல்லத்தில் வண்ணப்பொடிகளோடு ஹோலி பண்டிகையை கொண்டாடினார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு, இனிப்புகளை வழங்கி பிறகு ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று டெல்லியில் உள்ள அவரின் இல்லத்தில் பொது மக்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
பொதுமக்களுக்கு ஹோலி வாழ்த்துகளை தெரிவித்த அவர் அவர்களின் நெற்றியில் வண்ணப்பொடிகளை இட்டு மக்களுடன் மக்களாக மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
முன்னதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லே ராணுவ முகாம் சென்று, கடும் குளிரிலும் தேசத்தை காத்து வரும் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உற்சாகப்படுத்தினார்.
மேலும் பாரத மக்கள் அனைவர்க்கும் தனது எக்ஸ் பக்கத்தில் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை கூறினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த வண்ணத் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் புதிய ஆற்றலை தரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.