காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் ஆலயத்தில், பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவப் பெருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
உத்திரமேரூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவப் பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, அத்திவரதர் ஆலயத்தில் இருந்து கிராம மக்கள் மாங்கல்யம் உள்ளிட்ட திருமண சீர்வரிசை பொருட்களுடன் கோவிலை வந்தடைந்தனர். கோவிலில் விசேஷ கலச பூஜை, ஹோமங்கள் நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், கைலாசநாதரும், திரிபுர சுந்தரி அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மாந்திரங்கள் முழங்க, கைலாசநாதருக்கும், திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதற்கிடையே, பரதநாட்டிய குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. பழமையான பக்தி பாடல்களுக்கு சிறுமிகள் அற்புதமாக நடனமாடினர். இதனை பக்தர்கள் வியந்து பார்த்தனர்.