பாஜக கோவை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளராக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அண்ணாமலைக்கு சென்ற இடம் எல்லாம் ஆன்மீக அறிஞர்களும், பாஜகவினரும், கூட்டணிக்கட்சியினரும், பொது மக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், வணக்கத்திற்குரிய பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன். தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் கொண்டு செல்லும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூற்றுக்கணக்கான திருக்கோவில்களில், திருநெறிகளை நடத்தி, வழிபாட்டு முறைகளோடு, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பணிகள் மேற்கொண்டு வரும் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரும் பாராளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து உரையாடினோம் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை,
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக பாஜக சார்பாக, மாவட்ட நிர்வாகிகள், பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, தமிழகமும் இம்முறை நிச்சயம் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டோம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க வேண்டுமென்று, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் முனைப்புடன் பணியாற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் மக்கள் விரும்பும் நேர்மையான அரசியல் மாற்றம், எட்டும் தூரத்தில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, தன்னலமின்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நன்றிகளை மாலையாக கோர்த்து வெளிப்படுத்தினார்.
பின்னர், தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் திரு.P. இராமநாதன் அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சித் திறனாலும், ஆளுமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, தனது ஆதரவாளர்களுடன், தமிழக பாஜக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு.ஜெயசதீஷ் அவர்கள் முன்னிலையில், தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில், பொதுமக்களுக்காகப் பெரிதும் பணிகள் மேற்கொண்டிருக்கும் டாக்டர் திரு.P.இராமநாதன் அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன் என்றார்.
இந்த நிலையில், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று, கோவை தெற்கு மாவட்டத் தலைவர் V.V.வாசன், வடக்கு மாவட்டத் தலைவர் திரு T. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தன்னலமற்ற தலைவர் ஐயா G.K.மூப்பனார் அவர்கள் காட்டிய பாதையில், அண்ணன் திரு GK வாசன் அவர்கள் வழிநடத்துதலில் பயணிக்கும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி சகோதரர்களின் கடுமையான உழைப்பு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க உறுதுணையாக இருக்கும். வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழகத்தின் பங்கும் நிச்சயம் எதிரொலிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.