தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 12,616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் ஆண்கள். 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் பெண்கள். மாற்றுப் பாலினத்தவர் 1. இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் பங்கேற்கின்றனர். 3,350 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.
28ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1ம் தேதி கணக்கு, 4ம் தேதி அறிவியல், 6ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 8ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15க்கு முடியும். தேர்வின்போது வழக்கமாக அனுமதிக்கப்படும் 15 நிமிடம் இந்த தேர்விலும் உண்டு.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்ச 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இதனை ஊக்கப்படுத்த முயலும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.