திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 300 கைத்தறி துண்டுகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், 300 கைத்தறி துண்டுகள் இருந்தது.
காரை ஓட்டி வந்த பிரசாந்த் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 300 கைத்தறி துண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.