இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும், சுயேட்சை உறுப்பினர் மூவரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அப்போது, இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், 6 எம்எல்ஏக்களும் அவைக்கு வர காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது. எனினும், அவர்கள் வராததால், 6 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து அந்த 6 பேரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அந்த 6 இடங்களும் காலியாக உள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது.
மொத்தம் 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 43 உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. அதில் 3 பேர் சுயேட்சை உறுப்பினர்கள். 25 எம்எல்ஏக்களுடன் பாஜக எதிர்கட்சியாக உள்ளது.