திருவாரூரில் இன்று காலை பயங்கர வெடி சத்தம் கேட்டதாலும், அப்போது, வீடுகள் அதிர்ந்ததாலும், பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.
இன்று காலை திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி, பூந்தோட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெடிச்சத்தம் கேட்டது. அப்போது, அங்கிருந்த வீடுகள் அனைத்தும் அதிர்ந்துள்ளது. இது பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் திடுக்கிட்டனர்.
இன்று காலை முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அருகே உள்ள நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியிலும் இந்த வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒருவித பதற்றம் நிலவியது.
இது தொடர்பாக காவல்துறையில் சிலர் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சாவூர் – கோடியக்கரை பகுதியில் சென்ற ஜெட் விமானத்திலிருந்து ஏர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஏற்பட்ட சத்தம்தான் இது. வேறு ஒன்றும் அல்ல என திருவாரூர் மாவட்ட காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.