வடமேற்கு பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். தசு எனும் பகுதியில் சீன நாட்டினரின் கான்வே வாகனத்தின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தகவலைப் பாகிஸ்தானைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். அங்கே குண்டுவெடிப்பு சம்பவங்கள் கூட பல முறை நடந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் வலுவாக இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
அப்படியொரு தாக்குதல் தான் மீண்டும் பாகிஸ்தான் நாட்டில் இப்போது நடந்துள்ளது. சீன நாட்டவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இதைச் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்த நிலையில், சீன பொறியாளர்கள் பலரும் அந்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களில் சிலர் இஸ்லாமாபாத்தில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசு என்ற இடத்திற்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் காரில் பயணித்த சீனாவைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக யதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் முகமது அலி கந்தாபூர் தெரிவித்தார். அவர்களுடன் சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுநரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த கைபர் பக்துன்க்வா போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய கார்களுக்கு பின்னால் சென்ற மற்ற கார்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அம்மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். சீனப் பொறியாளர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.