ஆசியான் நாடுகளுக்கான வெளிநாட்டு பணியமர்த்தலின் ஒரு பகுதியாக, இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான சமுத்ரா பஹேர்தார் பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவை சென்றடைந்தது.
இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் சமுத்ரா பஹேர்தார் (ஒரு சிறப்பு மாசு கட்டுப்பாட்டு கப்பல்), மூன்று நாள் பயணமாக நேற்று பிலிப்பைன்ஸின் மணிலா விரிகுடாவைச் சென்றடைந்தது.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதைத் தவிர, ஆசியான் பிராந்தியத்தில் கடல் மாசுபாடு குறித்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக சிறப்பு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களின் வருகை அமைந்துள்ளது.
இந்தக் கப்பல் ஆசியான் நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனே ஆகிய நாடுகளுக்கு மார்ச் 25 முதல் ஏப்ரல் 12 வரை அனுப்பி வைக்கப்படுகிறது. ஆசியான் நாடுகளுக்கு இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல்களை அனுப்புவது இது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகும்.
முன்னதாக 2023-ம் ஆண்டில், இந்தியக் கடலோரக் காவல்படையின் மாசு கட்டுப்பாட்டு கப்பல்கள் கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சென்றன.
இதன் தொடர்ச்சியாக, மணிலா (பிலிப்பைன்ஸ்), ஹோ சி மின் (வியட்நாம்), முரா (புருனே) ஆகிய துறைமுகங்களில் துறைமுக அழைப்புகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் சிறப்பு கடல் மாசு கட்டுப்பாட்டு உபகரணங்கள் மற்றும் மாசுகளைத் தடுக்கும் கட்டமைப்பில் ஒரு சேதக் ஹெலிகாப்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது கசிந்த எண்ணெயைக் கட்டுப்படுத்தி, மீட்டெடுப்பதுடன், செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்களுக்கு வருகை தரும் இடங்களில் மாசு தடுப்பு பயிற்சி மற்றும் பல்வேறு உபகரணங்களின் செய்முறை விளக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படுறது.
கூடுதலாக, இந்தக் கப்பல் 25 என்.சி.சி கேடட்களையும் அரசின் முன்முயற்சியான புனீத் சாகர் இயக்கத்தில் பங்கேற்கவும், கூட்டாளர் நாடுகளுடன் ஒருங்கிணைந்து சர்வதேச அணுகலை வழங்கவும் அனுப்பியுள்ளது.
வெளிநாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, என்.சி.சி. கேடட்கள், ஐ.சி.ஜி கப்பல் குழுவினர், பங்குதாரர் முகவர் பணியாளர்கள், இந்திய தூதரகம் / தூதரக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, கப்பலின் துறைமுக அழைப்பின் போது கடற்கரையை சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை, வியட்நாம் கடலோரக் காவல்படை மற்றும் புருனே கடல்சார் முகமைகள் உள்ளிட்ட முக்கிய கடல்சார் முகமைகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தப் பயணம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது.
பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடலோரக் காவல்படையினருடன் மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் பாதுகாப்பு, பந்தோபஸ்து, கடல் சுற்றுச்சூழல் கவலைகளை உறுதி செய்வதற்காக இந்த உறவுகள் பல ஆண்டுகளாக உருவாகியுள்ளன. இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களில் தொழில்முறை பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சிகள், திறன் வளர்ப்பு வசதிகளுக்கான வருகைகள் உள்ளிட்ட சமூக ஈடுபாடுகள் அடங்கும்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.சி.ஜி.எஸ் சமுத்ரா பஹேர்தார், துணைத் தலைமை ஆய்வாளர் சுதிர் ரவீந்திரன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல ஆண்டுகளாக, சமுத்ரா பஹேர்தார் மாசு கண்காணிப்பு, நாடு கடந்த குற்றங்கள், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு கடலோரக் காவல்படை நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.