தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. தற்போதுவரை 780 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் (மார்ச் 25) மனுக்களை அளித்தனர். அதனால், ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 402-ஆக இருந்தது. அதில், ஆண்கள் சார்பில் 341 மனுக்களும், பெண்கள் தரப்பில் 61 மனுக்களும் தாக்கலாகின. வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளான மார்ச் 20-ம் தேதி 22 மனுக்களும், 21-ம் தேதி 9 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 22-ம் தேதி 47 மனுக்களும், 25-ஆம் தேதி 402 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமகவின் கே.பாலு ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அப்போது சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படவுள்ளன. இதற்கான நடைமுறைகள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் நடைபெறும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கோரினால், குலுக்கல் முறை பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.