கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் நேற்று முன்தினம் (மார்ச் 25) மனுக்களை அளித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. தற்போதுவரை 780 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணாமலை ஊர்வலமாக வந்து மக்களை சந்தித்தார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.. பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார். அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.