33 மாதங்களாக திமுக தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மக்களவை தேர்தல் பணிமனை தொடக்க விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று தேர்தல் பணிமனையை தொடங்கி வைத்தார். பின்னர் அண்ணாமலை வேட்பாளர் செந்தில்நாதனுக்கு நெற்றி திலகமிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனை தொடரந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
தமிழகத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரை பிரதமர் மோடி வரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், நிச்சயமாக தேர்தல் பரப்புரைக்கு அவர் வருவார். தேர்தல் பரப்பரைக்காக கரூருக்கு மோடி மற்றும் அமித்ஷாவை அழைத்து வரவேண்டும் என்றும், கிராமப் பகுதி மக்களிடம் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வேலை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் கிடைக்கவில்லை. மாவட்ட அமைச்சரான செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவ்வப்போது வேடந்தாங்கல் பறவை போல் வந்து செல்கிறார்.
உங்களுக்காக உழைக்கக்கூடிய நபரை எம்.பி ஆக்க வேண்டும். அதற்காகதான் பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் செந்தில்நாதனை வேட்பாளராக அறிவித்துள்ளனர். 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 295ம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 511ல் 20 கூட நிறைவேற்றவில்லை. 99% வாக்குறுதி நிறைவேற்றியதாக கூறும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
400 எம்.பிக்களுடன் வெற்றி பெற்று பிரதமர் மீண்டும் ஆட்சி அமைப்பார். அதில் செந்தில்நாதனும் இருப்பார். செந்தில்நாதன் வெற்றி பெற்றால், தொகுதியை விட்டு வெளியே எங்கும் செல்ல மாட்டார்.
கரூரில் மூன்று சட்டமன்ற தொகுதிகள் வறட்சி மிகுந்த பகுதியாக உள்ளது. யோசித்து, ஆராய்ந்துதான் செந்தில் நாதனை வேட்பாளராக அறிவித்துள்ளோம். கரூர் தொகுதி மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் செந்தில்நாதன் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.