டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கோவை ஈஷா மைய நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சில நாட்களுக்கு முன், கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால், அவருக்கு கடந்த 17-ஆம் தேதி மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சத்குருவின் உடல்நிலை குணமடைந்து வருவதாக, அறுவை சிகிச்சைக்கு தலைமை தாங்கிய அப்பல்லோ மருத்துவமனை டாக்டர். வினித் சூரி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், உடல் நிலை குணம் அடைந்ததை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.