திருச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக, அனைத்து இடங்களிலும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 9 குழுக்கள் வீதம், மாவட்டம் முழுவதும் 81 பறக்கும் படை மற்றும் 81 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை திருச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 530 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், ரூ.27 லட்சத்து 58 ஆயிரத்து 300 சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
மேலும், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடந்த கண்காணிப்புப் பணியில் இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரத்து 722 ரூபாய் மதிப்பிலான மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.